திங்கள், 1 அக்டோபர், 2012

உணவு சட்டத்திற்கு ஒத்துழைப்பு ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு-தினமலர் செய்தி

 
கடலூர்:உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்திற்கு, ஒத்துழைப்பு தருவதாக, கடலூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.கடலூரில், மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். ஆனந்தபவன் நாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பேசுகையில் கூறியதாவது:உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்திற்கு, பொது மக்களும், ஓட்டல் உரிமையாளர்களும் சிறப்பான ஒத்துழைப்பு தருகின்றனர்.
தமிழகத்தில், கடலூர் மாவட்டம், முதன்மையானதாகத் திகழ வேண்டும். மழைக் காலம் நெருங்கி வரும் வேளையில் சுத்தமான குடி நீர் வினியோகம் செய்ய வேண்டும். உணவுப் பொருட்களில் கலர் பவுடர் கலப்பதால், புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே, கலர் பவுடர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்திற்கு, முழு ஒத்துழைப்பு தருவதாக, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், பொருளாளர் ரவி, துணைத் தலைவர்கள் அசோக், சிவக்குமார், நகர ஓட்டல் உரிமையாளர்கள், ஸ்வீட் கடை உரிமையாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக