புதன், 5 டிசம்பர், 2012

நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு

கடலூர்:கடலூரில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கடலூர், செம்மண்டலத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் கடலூர் தாலுகாவில் உள்ள ரேஷன்கடைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.மூட்டைகளை லாரியில் ஏற்றி, இறக்கும் போது சிந்தும் உணவு தானியங்களை முறையாக அகற்றாமல் குடோனுக்கு பின் பகுதியில் கொட்டி வந்தனர். சமீபத்தில் பெய்த மழையில் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதில் தானியங்கள் ஊறி, புழு பிடித்து துர்நாற்றம் வீசியது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். பல லட்சம் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள் வழங்கும் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருவது குறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா, நேற்று கடலூர் நுகர் பொருள் வாணிபக் கழக குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை தரமானவையா என ஆய்வு செய்தார். இந்த சோதனையால் குடோன் வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக