திங்கள், 7 ஜனவரி, 2013

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும்’-தினமணி செய்தி


உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எதிர்த்து உணவு தானிய வணிகர்கள், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், உழவர்கள், நுகர்வோர்கள் ஒருங்கிணைந்து களம் இறங்கி போராட வேண்டும் என்று தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளரும், சிறுதொழில் முனைவோர் அமைப்பு ஆலோசகருமான கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
÷சிதம்பரத்தில் வர்த்தகர் சங்கம், சிறுதொழில் முனைவோர் அமைப்பு ஆகியவை இணைந்து வணிகம், தொழில், வேளாண் பாதுகாப்பு குறித்த பயிலரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
÷பயிலரங்கிற்கு வர்த்தகர் சங்கத் தலைவர் டி.டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். 
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு குறித்து தமிழ் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளரும், சிறுதொழில் முனைவோர் அமைப்பு ஆலோசகருமான கி.வெங்கட்ராமன் பயிலரங்கில் பங்கேற்று விளக்கவுரையாற்றினார்.
÷அவர் பேசியது: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் மூலம் சில்லறை வணிகத்திலிருந்து மண்ணின் வணிகர்களை வெளியேற்றும் திட்டத்தை மத்தியஅரசு அறிவித்துள்ளது.
÷தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள சிறிய, நடுத்தர உணவு தானிய வணிகத்தையும், உணவு விடுதிகளையும், அடுமனைகளையும் (ரொட்டிக்கடைகள்), தேநீர் விடுதிகளையும், இறைச்சி வணிகத்தையும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டம் என்ற ஒரே ஒரு சட்டத்தை வைத்தே அடித்து நொறுக்க மத்தியஅரசு களம் இறங்கியுள்ளது. ÷சாலையோரக் கடைகளில் தொடங்கி மிகப்பெரிய அளவிலான சில்லறை வணிகர்களையும், சிறு உற்பத்தியாளர்களையும் மிகக்கடுமையாக இச்சட்டம் பாதிக்கும்.
÷இச்சட்டத்தை எதிர்த்து உணவு தானிய வணிகர்கள், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், உழவர்கள், நுகர்வோர்கள் ஒருங்கிணைந்து களம் இறங்கி போராடி இச்சட்டத்தை முறியடிக்க வேண்டும் என கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
÷உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தினால் வணிகர் மற்றும் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் பண்ருட்டி ச.ராஜேந்திரன், தமிழ்நாடு உணவு பொருள்கள் வியாபாரிகள் சங்க ஆலோசகர் ரா.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
÷பயிலரங்கில் வர்த்தகர் சங்க செயலர் பெரி.முருகப்பன், சிறுதொழில் முனைவோர் அமைப்பு நகர அமைப்பாளர் கு.சிவப்பிரகாசம் உள்ளிட்ட வியாபாரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக