சனி, 16 பிப்ரவரி, 2013

நெய்வேலியில் அவலம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு-தினமணி செய்திநெய்வேலியில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் கெட்டுப் போன நிலையில் மீண்டும் சூடாக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் உடல் நல உபாதைக்கு ஆளாகின்றனர்.
இது தொடர்பாக என்.எல்.சி. நகர நிர்வாக சுகாதாரத் துறை அண்மையில் உணவக உரிமையாளர்களை அழைத்து அவசர ஆலோசனை வழங்கி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
என்எல்சி நகர நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நகரியத்தில் நகர நிர்வாகத்தின் உரிமம் பெற்று 200 உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் சைவ மற்றும் அசைவ உணவகங்களும் அடங்கும். இந்நிலையில் அண்மைக்காலமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்கள் தரமில்லாமலும், கெட்டுப்போன நிலையிலும் விற்பனை செய்யப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக அசைவ உணவகங்களில் விற்பனை செய்யப்படும் மாமிசங்கள் மீண்டும் மீண்டும் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதோடு, இட்லி, தோசைக்கு பயன்படுத்தப்படும் மாவுகள் புளித்த நிலையிலும், முதல் நாள் வடிக்கப்பட்ட சாதத்தை பயன்படுத்திய போக மிஞ்சிய சாதத்தை, இட்லி மாவு அரைக்கும் போது அவற்றுடன் சேர்த்து அரைத்து உணவு தயாரித்து வருவதாக புகார் எழுந்தது.
மேலும் வடை, பஜ்ஜி, சமோசா உள்ளிட்ட எண்ணெய் பதார்த்தங்களுக்கு மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யை பயன்படுத்துவதால் உணவகத்தில் உணவு உண்ணும் பொதுமக்கள் உடல் நல உபாதைக்கு ஆளாக நேரிடுகிறது.
கடந்த 6 மாதங்களில் என்எல்சி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் உணவு தொடர்பாக நோய் ஏற்பட்டு சிசிச்சைப் பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து என்எல்சி நகர நிர்வாக சுகாதாரத் துறையினர் நெய்வேலி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தியதில் மெயின்பஜார் மற்றும் எட்டுரோடு சந்திப்பில் உள்ள பிரபல அசைவ உணவகங்களில் கெட்டுப்போன மாமிசங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில உணவகங்களில் புளித்த இட்லி மாவு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவைகளைக் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட உணவகங்களுக்கு அபாரதம் விதித்துள்ளனர்.
இதன் விபரீதத்தை உணர்ந்த என்எல்சி நகர நிர்வாக பொதுமேலாளர் கே.சக்கரவர்த்தி, உணவக உரிமையாளர்களை அழைத்து பிப்ரவரி 8-ம் தேதி உணவுப் பாதுகாப்பும், நெறிமுறைகளும் எனும் தலைப்பில் உணவு மூலம் பரவும் நோய்கள், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், அவற்றை தடுக்கும் முறைக் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
இது தவிர்த்து இனிப்புக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கையேட்டையும் வழங்கியுள்ளார். உணவுப் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் உணவகங்களுக்கு அபராதம் மட்டும் தீர்வாகுமா? உணவுப் பாதுகாப்பின் அவசியம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அவற்றை நம்மில் எத்தனை பேர் கடைபிடிக்கிறோம். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின்படி உணவுக் கலப்படம் செய்தலுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை விதிக்க வாய்ப்புண்டு.  ஆனால் நெய்வேலி நகரில் உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட உணவக உரிமையாளர்களுக்கு அபராதம் மட்டும் தீர்வாகுமா?
இது குறித்து என்எல்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "எங்களைப் பொறுத்தமட்டில் கெட்டுப்போன உணவு அல்லது கலப்பட உணவாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உரிமம் வழங்கும் பிரிவுக்கு பரிந்துரைப்போம்.
உரிமம் வழங்கும் பிரிவினர் என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ? அதில் நாங்கள் தலையிடுவதில்லை எனக் கூறிவிட்டனர்.
உணவகத்துக்கான உரிமம் வழங்கும் பிரிவினர்களோ ஒவ்வொரு முறைகேட்டுக்கும் அபராதம் எவ்வளவு என விதிக்கத்தான் எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதையும் தாண்டி உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கலாம்.
மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என கைவிரித்துவிட்டனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி எம்.பி.ராஜா கூறுகையில், "மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி வாரியாக 32 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நெய்வேலி நகரியம் மத்திய அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, உணவுப் பாதுகாப்பு அதிகாரி நியமனம் குறித்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளோம்.  ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப நெய்வேலி நகருக்கு என உணவுப் பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்தவுடன் தவறு செய்வோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் ராஜா.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

தினந்தந்தி செய்தி எதிரொலி விருத்தாசலம் வாழைப்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு-தினத்தந்தி செய்தி


விருத்தாசலம்,
7 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தீர்த்த மண்டப தெருவில் பழனிவேல் என்பவர் வாழை பழ குடோன் வைத்து தொழில் செய்து வந்தார். குடியிருப்புகளுக்கு இடையே அமைந்திருந்த இந்த குடானில் பழங்களை பழுக்க வைப்பதற்கென கார்ப்பைடு கல்லினை பயன்படுத்தியதால், கடந்த 30–ந்தேதி இரவு திடீரென வெடித்து சிதறியது.
இதில் குடோனினை ஒட்டி அமைந்திருந்த வீடு முற்றிலும் சேதடைந்தது. மேலும் இவ்விபத்தில் ஒரு 2 வயது கைக்குழந்தை உட்பட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வாழைபழ குடோன் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
செய்தி எதிரொலி
இதன் மூலமாக வாழைபழங்கள் பழுக்க வைப்பதற்கென கார்பைடு கல் பயன்படுத்தப்படுவது அம்பலமாகியிருப்பது தெரியவந்துள்ளது என்றும், இதனால் உண்டாகும் தீமைகள் என்ன என்பது குறித்தும் நேற்று தினந்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று, கடலூர் மாவட்ட உணவு பொருள் மற்றும் மருந்து துறை நல அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் நகர அலுவலர் நல்லதம்பி, கடலூர் ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியன் ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழுவினர் விருத்தாசலத்திற்கு நேற்று வந்தனர்.
ஆய்வு
தொடர்ந்து தீர்த்த மண்டபத்தில் வெடித்து சிதறிய குடோனை நல அதிகாரி டாக்டர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, அங்கு கார்ப்பைடு கல் வைத்து வாழை பழங்களை பழுக்க வைத்ததற்கான, ஆதரங்களை அதிகாரிகள் சேகரித்து சென்றனர். மேலும் அதே பகுதியில் வாழைபழங்களை பழுக்க வைக்கும், குடோன்களில் ஆய்வு செய்தனர்.
கடும் நடவடிக்கை
அப்போது டாக்டர் ராஜா கூறுகையில் வாழைபழங்களை பழுக்க வைப்பதற்கென கார்ப்பைடு கல்கள் பயன்படுத்தப்படுவதினால், தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. இந்த வகை கல்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தோம். இருப்பினும் இதுபோன்ற நடவடிக்கைகள் சிலர் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே இனியும் இந்த நிலை தொடருமாயின், அவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு கார்ப்பைடு கல்லினை வைத்து பழுக்க வைத்த பழங்களை உண்பவர்களுக்கு அஜிரண கோளாறு, புற்று நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுபோன்று செயல்படுபவர்களை பொதுமக்கள் கண்டறிந்தாலும், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம் என அவர் தெரிவித்தார்.
அதிகாரியுடன் வாக்குவாதம்
விருத்தாசலத்தில் வெடித்து சிதறிய பழக்குடோனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு விட்டு, மேலும் அங்கு மணிமுக்தாற்றில் உள்ள பழக்குடோனை ஆய்வு செய்வதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர், சம்பவம் நடைபெற்ற 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்று நீங்கள் வருகிறீர்களே? இதனால் என்ன பயன்? அடுத்தடுத்து அதிகாரிகளை பார்த்து கேள்வி கேட்டார்.
இதற்கு அதிகாரிகள் தரப்பிலோ நாங்கள் மாதந்தோறும் குடோன்களுக்கு சென்று பார்வையிட்டு எச்சரித்துதான் செல்கிறோம் என்றனர். மேலும் இதுபோன்று குடியிருப்புகளுக்கு உள்ளே குடோன் அமைந்துள்ளதை எங்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திறுப்போம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர் மேற்கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதனால் அங்கு வந்த அதிகாரிகளுகும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு,சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளானது.