ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

தினந்தந்தி செய்தி எதிரொலி விருத்தாசலம் வாழைப்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு-தினத்தந்தி செய்தி


விருத்தாசலம்,
7 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தீர்த்த மண்டப தெருவில் பழனிவேல் என்பவர் வாழை பழ குடோன் வைத்து தொழில் செய்து வந்தார். குடியிருப்புகளுக்கு இடையே அமைந்திருந்த இந்த குடானில் பழங்களை பழுக்க வைப்பதற்கென கார்ப்பைடு கல்லினை பயன்படுத்தியதால், கடந்த 30–ந்தேதி இரவு திடீரென வெடித்து சிதறியது.
இதில் குடோனினை ஒட்டி அமைந்திருந்த வீடு முற்றிலும் சேதடைந்தது. மேலும் இவ்விபத்தில் ஒரு 2 வயது கைக்குழந்தை உட்பட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வாழைபழ குடோன் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
செய்தி எதிரொலி
இதன் மூலமாக வாழைபழங்கள் பழுக்க வைப்பதற்கென கார்பைடு கல் பயன்படுத்தப்படுவது அம்பலமாகியிருப்பது தெரியவந்துள்ளது என்றும், இதனால் உண்டாகும் தீமைகள் என்ன என்பது குறித்தும் நேற்று தினந்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று, கடலூர் மாவட்ட உணவு பொருள் மற்றும் மருந்து துறை நல அதிகாரி டாக்டர் ராஜா தலைமையில் நகர அலுவலர் நல்லதம்பி, கடலூர் ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியன் ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழுவினர் விருத்தாசலத்திற்கு நேற்று வந்தனர்.
ஆய்வு
தொடர்ந்து தீர்த்த மண்டபத்தில் வெடித்து சிதறிய குடோனை நல அதிகாரி டாக்டர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது, அங்கு கார்ப்பைடு கல் வைத்து வாழை பழங்களை பழுக்க வைத்ததற்கான, ஆதரங்களை அதிகாரிகள் சேகரித்து சென்றனர். மேலும் அதே பகுதியில் வாழைபழங்களை பழுக்க வைக்கும், குடோன்களில் ஆய்வு செய்தனர்.
கடும் நடவடிக்கை
அப்போது டாக்டர் ராஜா கூறுகையில் வாழைபழங்களை பழுக்க வைப்பதற்கென கார்ப்பைடு கல்கள் பயன்படுத்தப்படுவதினால், தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. இந்த வகை கல்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தோம். இருப்பினும் இதுபோன்ற நடவடிக்கைகள் சிலர் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே இனியும் இந்த நிலை தொடருமாயின், அவர்கள் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு கார்ப்பைடு கல்லினை வைத்து பழுக்க வைத்த பழங்களை உண்பவர்களுக்கு அஜிரண கோளாறு, புற்று நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுபோன்று செயல்படுபவர்களை பொதுமக்கள் கண்டறிந்தாலும், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம் என அவர் தெரிவித்தார்.
அதிகாரியுடன் வாக்குவாதம்
விருத்தாசலத்தில் வெடித்து சிதறிய பழக்குடோனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு விட்டு, மேலும் அங்கு மணிமுக்தாற்றில் உள்ள பழக்குடோனை ஆய்வு செய்வதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர், சம்பவம் நடைபெற்ற 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்று நீங்கள் வருகிறீர்களே? இதனால் என்ன பயன்? அடுத்தடுத்து அதிகாரிகளை பார்த்து கேள்வி கேட்டார்.
இதற்கு அதிகாரிகள் தரப்பிலோ நாங்கள் மாதந்தோறும் குடோன்களுக்கு சென்று பார்வையிட்டு எச்சரித்துதான் செல்கிறோம் என்றனர். மேலும் இதுபோன்று குடியிருப்புகளுக்கு உள்ளே குடோன் அமைந்துள்ளதை எங்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திறுப்போம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர் மேற்கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதனால் அங்கு வந்த அதிகாரிகளுகும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு,சிறிது நேரம் பரபரப்புக்கு உள்ளானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக