ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ரஸ்னா சாப்பிட்டு வாந்தி, மயக்கம் எதிரொலி: உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை-தினமலர் செய்தி


14_04_2013_010_002_001 காட்டுமன்னார்கோவிலில் ரஸ்னா சாப்பிட்டு 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நேற்று முன்தினம் ரஸ்னா வாங்கி சாப்பிட்ட 4 குழந்தைகள் உட்பட 6 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று காட்டுமன்னார்கோவில் பகுதி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை மேற்கொண்டார். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம், கச்சேரி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காலாவதியான உணவு பொருட்கள், காலாவதி தேதி இல்லாத பாக்கெட் உணவுகள், பாக்கெட் குளிர்பானங்கள் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், டீ கடைகளில் கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது. டீ கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கக் கூடாது. அனைத்து பாக்கெட் பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார மருத்துவர் சிவானந்தம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சியான், நல்லதம்பி, ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், சுப்ரமணியன், அருண்மொழி, சுகாதார மேற்பார்வையாளர் தம்பா உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக