திங்கள், 13 மே, 2013

கடலூர் பஸ்நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை 11 வகையான பான்பராக், புகையிலை பொருட்கள் பறிமுதல்-தினத்தந்தி செய்திகடலூர்
கடலூர் பஸ்நிலைய கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி நடத்திய சோதனையில் பான்பராக், புகையிலை உள்ளிட்ட 11 வகையான பொருட்களை பறிமுதல்செய்தனர்.
கடலூர் பஸ்நிலையத்தில்
பான்பராக், புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இருப்பினும் கடலூர் பஸ் நிலைய கடைகளில் சிலர் மறைமுகமாக விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நந்தகுமார்(கடலூர்), ஏழுமலை(பரங்கிப்பேட்டை), பன்னீர்செல்வம்(கம்மாபுரம்) ஆகியோர் கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் அதிரடிசோதனை நடத்தினார்கள். அப்போது கடைகளில் தோரணம் போன்று தொங்கவிடப்பட்டிருந்த பான்பராக், புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களையும் எச்சரித்தனர்.
நச்சுப்பொருள்
பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் எம்.பி.ராஜா நிருபர்களிடம் கூறும்போது பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்துள்ளது. பான்பராக்கில் போதைக்காக பொலோனியம்–6 என்ற கதிர்வீச்சு நச்சுப்பொருள் உள்ளது. இதை ஒருமுறை சுவைத்தவருக்கு மீண்டும் அதை சுவைக்க ஆசையை தூண்டும். அந்த அளவுக்கு சக்தி பான்பராக்கில் உள்ளது.
இதை வாயில் போட்டு சுவைப்பதால் வாய்ப்புற்று நோய் ஏற்படும். ஒரு கட்டத்தில் உதட்டை அசைக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் கடல் பகுதியானது செரிமான தன்மையை இழந்து விடும். எனவே பான்பராக், புகையிலை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.
11 வகை பொருட்கள் பறிமுதல்
இதைத் தொடர்ந்து பான்பராக், புகையிலை பயன்பாட்டை ஒழிக்கும் பணியை இன்று(அதாவது நேற்று) முதல் தொடங்கி இருக்கிறோம். கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், புகையிலை உள்ளிட்ட 11 வகையான பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை அழித்து இருக்கிறோம்.
முதல் முறை என்பதால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இந்த சோதனை கடலூர் மாவட்டம் முழுவதிலும் நடைபெறும். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்பட டீ தூள்
ஏற்கனவே கடலூர் பஸ்நிலைய கடைகளில் கலப்பட தூள் கலந்த டீயை விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தி கலப்பட தூள் கலந்து டீ விற்பனை செய்ததை கண்டு பிடித்து கடை உரிமையாளர்கள், ஊழியர்களை எச்சரிக்கை விடுத்துசென்றோம். தற்போது மீண்டும் அவர்கள் கலப்பட தூள் கலந்து டீ விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது.
இனி இதுபோன்று கலப்பட தூள் கலந்து டீ விற்பனை செய்தால் அந்த கடையின் உரிமையாளருக்கு நோட்டீசு கொடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக