புதன், 22 மே, 2013

கடைகளில் காலாவதி உணவுப் பொருள்கள் பறிமுதல்-தினமணி செய்தி


கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள், உணவகங்களில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தி, காலாவதி உணவு பொருள்களை கைப்பற்றி அழித்தனர். அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் உள்ள உணவகங்கள், கடைகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை காலை, கடலூர் நகராட்சி பேருந்து நிலையம், சுற்றியுள்ள பகுதியில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், பெட்டிக்கடைகளில் ஒரே நேரத்தில் ஆய்வு நடத்தினர்.
அப்போது சில உணவு விடுதிகளில், ஆபத்து விளைவிக்கும் கெமிக்கல் பேரல்களை சுத்தம் செய்து குடிநீர் நிரப்பி உள்ளனர். அதிகாரிகள் சோதனை நடத்தியபோது குடிநீரில் ரசாயனம் கலந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த குடிநீரை வெளியே ஊற்றி பேரல்கள் கைப்பற்றப்பட்டன. சம்பந்தப்பட்ட உணவு விடுதிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதேபோல் பங்க் கடைகள், பெட்டிக்கடைகளின் முன்பு வெயிலில் கட்டி தொங்க விடப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் அதிக வெப்பத்தால் கெட்டுப்போனதும் தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றி அழித்த அதிகாரிகள் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் பொருள்கள், காலாவதியான குளிர்பான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்பகுதியில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகளையும் நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கடந்தவாரம் இப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக