திங்கள், 17 ஜூன், 2013

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு


Capture
கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் சனிக்கிழமை அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவிச்சந்திரன், நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தண்ணீரின் தரம் நன்றாக உள்ளதா, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தலையில் தொப்பி, கையுறை, சீருடை அணிந்து இருக்கிறார்களா என்பதையும் பார்வையிட்டு அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கினர்.
மேலும் தானியங்கி இயந்திரம் மூலம் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் நுண் கிருமிகள் இருக்கிறதா என்பதை நவீன இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர். குடிநீரின் மாதிரியையும் பரிசோதனைக்காக சேகரித்துக்கொண்டனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் தரமான குடிநீரை தயாரித்து விநியோகம் செய்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
குடிநீரின் மாதிரியை சேகரித்து வைத்துள்ளோம். இதை சென்னை கிண்டியில் உள்ள அரசு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்போம். பரிசோதனை முடிவு 14 நாட்களுக்குள் தெரியவரும். அதில் சுகாதாரமற்ற, தரமற்ற, பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.
குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் குடிநீர் தயாரிப்பதற்காக எவர்சில்வர் குழாய்களைத் தான் பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாத குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 5 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு குடிநீரின் மாதிரியை சேகரித்துள்ளோம். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

புதன், 12 ஜூன், 2013

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை


நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்காவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழக அரசு பான்பராக், குட்கா போன்ற போதை தரும் பொருட்களால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுவதால் அவற்றின் விற்பனையை தடை செய்து உத்தரவிட்டது. ஆனால், அதன் பிறகு கள்ளச்சந்தையில் இப்பொருட்களின் விற்பனை அதிகளவு நடக்கிறது.கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நெல்லிக்குப்பம் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பல ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பறிமுதல் செய்தனர். முதல் முறை என்பதால் எச்சரிக்கை செய்கிறோம். இனி தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தனர்.அதேபோல், ரஸ்னா, மோர் பாக்கெட்டுகளில் தயாரித்த நிறுவனம், தயாரித்த தேதியை கண்டிப்பாக குறிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

செவ்வாய், 4 ஜூன், 2013

கடலூர் நகரில் டிராக்டர்களில் குளோரின் கலக்காத குடிநீர் விற்பனை உணவு பாதுகாப்பு அதிகாரி கடும் எச்சரிக்கை


கடலூர் நகரில் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலக்காததை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து, டிராக்டர் டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
குடிநீர் வினியோகம்
கடலூர் நகரில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நகராட்சி மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால் கேப்பர்மலையில் இருந்து டிராக்டர் டேங்கர்களில் கொண்டு வரப்படும் குடிநீரை பேரல் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் மக்கள் வாங்கி பருகுகிறார்கள். இவ்விதம் நகரில் நாளொன்றுக்கு சுமார் 100 டிராக்டர் டேங்கர் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் ராஜா, அதிகாரி நல்லதம்பி, நகர்நல அலுவலர் டாக்டர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் கேப்பர் மலையில் இருந்து குடிநீர் ஏற்றிக்கொண்டு வண்டிப்பாளையம் ரோட்டில் வந்த டிராக்டர்களை நிறுத்தி ‘குளோரோஸ்கோப்’ என்ற கருவி மூலம் குடிநீரை பரிசோதித்தனர். இந்த ஆய்வில் குடிநீரில் குளோரின் கலந்திராதது தெரியவந்தது. இதனால் டிராக்டர் டிரைவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசுகளை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா வழங்கினார்.
இது பற்றி அவர் கூறியதாவது:–
குளோரின் கலக்காமல்…
குடிநீர் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். அதாவது ஆயிரம் லிட்டர் குடிநீரில் 5 கிராம் குளோரின் கலக்க வேண்டும், இதை விட குறைவாக குளோரின் கலந்தால் கிருமிகள் சாகாது, அளவுக்கு அதிகமாக கலந்தால் அதை குடிப்பவர்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு விடும். எனவே சரியான அளவில் குளோரின் கலக்க வேண்டும் என்று டிராக்டர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்,
இது பற்றி இன்றைக்கு(அதாவது நேற்று) ஆய்வு செய்ததில் டிராக்டர் டிரைவர்கள் குளோரின் கலக்காத குடிநீரை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு கொடுத்திருக்கிறோம், இதே தவறை மீண்டும் செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம்.
இவ்வாறு டாக்டர் ராஜா கூறினார்.

கடலூரில் விநியோகிக்கும் டேங்கர் லாரி குடிநீர் சுகாதாரமற்றது – ஆய்வில் அதிர்ச்சி தகவல் : தினகரன் செய்தி


கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மாவட்டத்தின் தலைநகராக உள்ள கடலூரில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தேவையான குடிநீர் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
நாள்தோறும் 50 டேங்கர் லாரிகளில் சுமார் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கேப்பர் மலை பகுதிகளில் தனியார் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்களும் டேங்கர் லாரிகளில் ஒரு குடம் நீரை 5 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து நகராட்சி சேர்மன் சுப்பிரமணியன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று டேங்கர் லாரிகளை மடக்கி திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கேப்பர் மலை பகுதிகளில் உள்ள போர்வெல்களையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது, தினந்தோறும் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தண்ணீர் பிளீச்சிங் பவுடர் போடாமல் கொண்டு செல்லக்கூடாது.
வாரம் ஒருமுறை இதுதொடர்பான அறிக்கை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேப்பர் மலையில் உள்ள போர்வெல்கள் விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் குடிநீர் விற்பனைக்காக டேங்கர் லாரிகளில் ஏற்றிச்செல்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.