செவ்வாய், 4 ஜூன், 2013

கடலூரில் விநியோகிக்கும் டேங்கர் லாரி குடிநீர் சுகாதாரமற்றது – ஆய்வில் அதிர்ச்சி தகவல் : தினகரன் செய்தி


கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வினியோகம் செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மாவட்டத்தின் தலைநகராக உள்ள கடலூரில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தேவையான குடிநீர் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
நாள்தோறும் 50 டேங்கர் லாரிகளில் சுமார் 2.5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கேப்பர் மலை பகுதிகளில் தனியார் போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொதுமக்களும் டேங்கர் லாரிகளில் ஒரு குடம் நீரை 5 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து நகராட்சி சேர்மன் சுப்பிரமணியன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் நந்தகுமார், சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் நேற்று டேங்கர் லாரிகளை மடக்கி திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 50 டேங்கர் லாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கேப்பர் மலை பகுதிகளில் உள்ள போர்வெல்களையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜாவிடம் கேட்டபோது, தினந்தோறும் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தண்ணீர் பிளீச்சிங் பவுடர் போடாமல் கொண்டு செல்லக்கூடாது.
வாரம் ஒருமுறை இதுதொடர்பான அறிக்கை வழங்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேப்பர் மலையில் உள்ள போர்வெல்கள் விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் குடிநீர் விற்பனைக்காக டேங்கர் லாரிகளில் ஏற்றிச்செல்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக