திங்கள், 17 ஜூன், 2013

குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு


Capture
கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா தலைமையிலான அலுவலர்கள் குழுவினர் சனிக்கிழமை அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவிச்சந்திரன், நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தண்ணீரின் தரம் நன்றாக உள்ளதா, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தலையில் தொப்பி, கையுறை, சீருடை அணிந்து இருக்கிறார்களா என்பதையும் பார்வையிட்டு அவர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கினர்.
மேலும் தானியங்கி இயந்திரம் மூலம் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் நுண் கிருமிகள் இருக்கிறதா என்பதை நவீன இயந்திரம் மூலம் ஆய்வு செய்தனர். குடிநீரின் மாதிரியையும் பரிசோதனைக்காக சேகரித்துக்கொண்டனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் தரமான குடிநீரை தயாரித்து விநியோகம் செய்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
குடிநீரின் மாதிரியை சேகரித்து வைத்துள்ளோம். இதை சென்னை கிண்டியில் உள்ள அரசு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைப்போம். பரிசோதனை முடிவு 14 நாட்களுக்குள் தெரியவரும். அதில் சுகாதாரமற்ற, தரமற்ற, பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும்.
குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் குடிநீர் தயாரிப்பதற்காக எவர்சில்வர் குழாய்களைத் தான் பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை பின்பற்றாத குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 5 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு குடிநீரின் மாதிரியை சேகரித்துள்ளோம். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக