செவ்வாய், 4 ஜூன், 2013

கடலூர் நகரில் டிராக்டர்களில் குளோரின் கலக்காத குடிநீர் விற்பனை உணவு பாதுகாப்பு அதிகாரி கடும் எச்சரிக்கை


கடலூர் நகரில் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலக்காததை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து, டிராக்டர் டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
குடிநீர் வினியோகம்
கடலூர் நகரில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நகராட்சி மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால் கேப்பர்மலையில் இருந்து டிராக்டர் டேங்கர்களில் கொண்டு வரப்படும் குடிநீரை பேரல் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் மக்கள் வாங்கி பருகுகிறார்கள். இவ்விதம் நகரில் நாளொன்றுக்கு சுமார் 100 டிராக்டர் டேங்கர் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் ராஜா, அதிகாரி நல்லதம்பி, நகர்நல அலுவலர் டாக்டர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் கேப்பர் மலையில் இருந்து குடிநீர் ஏற்றிக்கொண்டு வண்டிப்பாளையம் ரோட்டில் வந்த டிராக்டர்களை நிறுத்தி ‘குளோரோஸ்கோப்’ என்ற கருவி மூலம் குடிநீரை பரிசோதித்தனர். இந்த ஆய்வில் குடிநீரில் குளோரின் கலந்திராதது தெரியவந்தது. இதனால் டிராக்டர் டிரைவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசுகளை உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா வழங்கினார்.
இது பற்றி அவர் கூறியதாவது:–
குளோரின் கலக்காமல்…
குடிநீர் மூலம் காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும். அதாவது ஆயிரம் லிட்டர் குடிநீரில் 5 கிராம் குளோரின் கலக்க வேண்டும், இதை விட குறைவாக குளோரின் கலந்தால் கிருமிகள் சாகாது, அளவுக்கு அதிகமாக கலந்தால் அதை குடிப்பவர்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு விடும். எனவே சரியான அளவில் குளோரின் கலக்க வேண்டும் என்று டிராக்டர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்,
இது பற்றி இன்றைக்கு(அதாவது நேற்று) ஆய்வு செய்ததில் டிராக்டர் டிரைவர்கள் குளோரின் கலக்காத குடிநீரை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு கொடுத்திருக்கிறோம், இதே தவறை மீண்டும் செய்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம்.
இவ்வாறு டாக்டர் ராஜா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக