வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

குளிர்பானம் குடித்த குழந்தை சாவு எதிரொலி 18 பேர் கொண்ட குழு கடைகளில் ஆய்வு-தினமணி செய்தி

குளிர்பானம் குடித்த குழந்தை இறந்ததால், 18 பேர் கொண்ட குழு கடலூர் மாவட்டத்தில் குளிர்பான கடைகள் மற்றும் கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நெய்வேலி அருகே சேப்ளாநத்தத்தில் பிரபல நிறுவனத்தின் குளிர்பானத்தை குடித்த சிறுமி அபிராமி(8), ஞாயிற்றுக்கிழமை இரவு பலியானார். இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் குளிர்பான கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
  இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறியது: சிறுமி பலியாக காரணமாக இருந்த குளிர்பானம் விற்ற கடையில் இருந்த அனைத்து குளிர்பானங்களையும் கைப்பற்றி சென்னையில் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் ஆய்வு வந்ததற்கு பிறகு தான் சிறுமி சாவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தெரியவரும்.
இந்த சம்பவத்தை அடுத்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், கீரப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. 18 ஊழியர்கள் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். இதுதவிர 13 ஒன்றியம், 5 நகராட்சிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலாவதியான குளிர்பானங்களை வைத்திருந்த மற்றும் உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த 2 குடோன்கள், 2 கடைகள் ஆகியவற்றுக்கு சீல் வைத்துள்ளோம்.
பொதுமக்கள் குளிர்பானங்களை வாங்கும்போது அதன் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளான ரஸ்னா, தண்ணீர் பாக்கெட், போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதில் காலாவதி தேதி போன்ற விவரங்கள் எதுவுமே இருக்காது.
சமூக நல அமைப்புகள் மூலம் மாவட்டம் முழுவதும் குளிர்பானம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தையும் செய்ய இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக