வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி உயிரிழப்பு-புதியதலைமுறை செய்தி

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் அருந்திய 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
அதனை குடித்த அவரது நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அபிராமி என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
CHILD PEPSI
இதையடுத்து குளிர்பானத்தை விற்பனை செய்த நாகரத்தினம், விநியோகம் செய்த பாபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாகரத்தினம் கடையை ஆய்வு செய்து சீல் வைத்தனர்.
குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை
நெய்வேலி அருகே சேப்ளாநத்தம் பகுதியில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்ததை அடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் ராஜா தலைமையில் 15 பேர் கொண்ட குழு பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், மந்தாரகுப்பம் 4 ரோடு பகுதியில் ஒரு கடையில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
குளிர்பானத்தில் “பேண்ட் எயிட்”
COKE
குளிர் பானங்களில் கலப்படம் செய்து விற்பனையாகிறது என்ற தகவல் வெளியானதையடுத்து, நமது நேயர் ஒருவர் குளிர்பானம் ஒன்றை நமது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான அந்த குளிர்பான பாட்டிலின் உள்ளே பேண்ட் எயிட் (Band Aid) ஒன்று காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக