செவ்வாய், 28 அக்டோபர், 2014

கடலூரில் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்; தொழில் வர்த்தக சங்கம் அறிவிப்பு

பண்ருட்டி : மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திட மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரும் 31ம்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: கடந்த கால மத்திய அரசினால் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஆன்லைன் வர்த்தகம் போன்ற சட்டங்களால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலை மேலும் தொடராமல் இருக்க வணிகர்களின் நிலையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம்.இதற்காக டில்லியில் நடந்த அகில இந்திய வணிகர்களின் சம்மேளன கூட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.அதன்படி தமிழகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்களின் பேரமைப்பு சார்பில் வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டுகின்றோம்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கீரப்பாளையம், புவனகிரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

25102014_epsuu3

புவனகிரி, அக்.25-

கீரப்பாளையம், புவனகிரியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காலாவதியான உணவு பொருட்கள்

கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் கீரப்பாளையம் கடை வீதியில் உள்ள கடைகளில் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தயாரிப்பு தேதி இல்லாத மற்றும் காலாவதி தேதி முடிந்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

டாஸ்மாக் கடையில் ஆய்வு

பின்னர் புவனகிரி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது மதுபானங்களில் கலப்படம் உள்ளதா? அரசு நிர்ணயித்த விலைக்கு விற்கப்படுகிறதா? அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று மதுபிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆனால் மதுபிரியர்கள் எதுவும் கூறவில்லை.

டாஸ்மாக் கடையில் ஆய்வு

புவனகிரி:புவனகிரி, கீரப்பாளையம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.புவனகிரி பஸ் நிலையத்திற்குள் இயங்கும் டாஸ்மாக் கடையில் போலி மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அதில், வெளிநாட்டு மது வகை என பாட்டில்களில் போலி லேபிள் ஒட்டப்பட்டுள்ளதா என சோதனை செய்தார்.தொடர்ந்து புவனகிரி, கீரப்பாளையம் கடைத்தெரு பகுதியில் பெட்டிக் கடைகள், கூல்டிரிங்ஸ், டீ கடை மற்றும் சிற்றுண்டி கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தும், அதனை விற்பனை செய்பவர்கள் மீது எச்சரிக்கையும் விடுத்தார். சிதம்பரம் வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பத்மநாபன், கீரைப்பாளையம் அருள்மொழி, புவனகிரி குணசேகரன் உடனிருந்தனர்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தீபாவளி விற்பனைக்காக செய்த தரமற்ற இனிப்பு, பலகாரங்கள் பறிமுதல்

கடலூர், : கடலூர் மாவட்டத்தில், சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட இனிப்பு பலாகாரங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு முக்கிய அம்சமாக அமைந்துள்ள இனிப்பு மற்றும் பிற பலகார வகைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விற்பனை செய்யப்படும் பலகாரங்கள், இனிப்பு வகைகள் தரமானதாக இல்லையென தொடர் புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இனிப்பு வகைகள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் பொருட்கள் பயன்பாடு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 125 கிலோ இனிப்பு மற்றும் பலகார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் பகுதியில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சொரக்கல்பட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் ஆய்வகத்தில் சோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

திங்கள், 20 அக்டோபர், 2014

பலகாரங்களை சுகாதாரமாக தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்

கடலூர் : ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராமப்பகுதி அனைத்திலும் தீபாவளியையொட்டி இனிப்பு மற்றும் காரவகை பலகாரங்கள் தயார் செய்து வருகின்றனர். பலகாரங்கள் தயார் செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பலகாரங்கள் செய்யுமிடம், சேமித்து வைக்குமிடம் விற்பனை செய்யுமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக செயற்கை சாயப்பொருட்கள், சுவையூட்டிகள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தரமான மாவு மற்றும் தரமான எண்ணெய் வகைகளை பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்க வேண்டும். பலகாரங்கள் ஈ மொய்க்காமலும், தெரு புழுதி படாமலும் மூடி வைக்க வேண்டும். இனிப்பு வகைகளை பட்டர் பேப்பரில் வைக்க வேண்டும்.இறைச்சி கடை நடத்துவோர் ஆரோக்கியமான பிராணிகளையும், கோழிகளையும் கொண்டு கறி வியாபாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதன், 15 அக்டோபர், 2014

கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

கடலூர்: கடலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களின் பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் ரவுடி ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன், ஏட்டு ஜான்பீட்டர் மற்றும் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் கிருஷ்ணன் தெருவில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்த பாரதி (30) என்பவருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், 8 மூட்டைகள் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் ஓப்படைக் கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பட்டு, போதை பொருட்கள் தான் என தெரிய வந்தால் குடோன் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள் ளப்படும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்தார்.