பக்கங்கள்
- HOME
- FORMS
- ACT&RULES
- CUDDALORE DISTRICT
- CUDDALORE TOWN
- CHIDAMBARAM TOWN
- PANRUTI TOWN
- PANRUTI BLOCK
- KAMMAPURAM BLOCK
- CUDDALORE BLOCK
- ANNAGRAMAM BLOCK
- KURINJIPADI BLOCK
- KEERAPALAYAM BLOCK
- PARANGIPETTAI BLOCK
- BHUVANAGIRI BLOCK
- VRIDHACHALAM BLOCK
- NALLUR BLOCK
- MANGALUR BLOCK
- KATTUMANNARKOIL BLOCK
- KUMARATCHI BLOCK
- VRIDHACHALAM TOWN

வெள்ளி, 28 நவம்பர், 2014
வியாழன், 27 நவம்பர், 2014
ஜாம் பாட்டிலில் பூச்சி: உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
கடலூரில் விற்பனையான ஜாம் பாட்டிலில் பூச்சி இருந்தது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
அனைத்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை துணைத் தலைவர் ஆர்.துவாரகநாத் கந்தசாமி. இவர், கடந்த 19-ம் தேதி கடலூர் சங்கரநாயுடு தெருவில் உள்ள ஒரு கடையில் மிக்ஸ்டு புரூட் ஜாம் வாங்கி குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அதில் விஷத்தன்மை உள்ள சில பூச்சிகள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு வெள்ளிக்கிழமை புகார் மனு அனுப்பினார்.
இந்த புகார் தொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம்.பி.ராஜா திங்கள்கிழமை சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டார். அதில், குறிப்பிட்ட ஜாம் பாட்டிலுடன் வந்திருந்த மற்ற பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பாட்டில்கள் ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதுவரையில் அந்த வகை ஜாமை விற்பனை செய்யக் கூடாதென கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எம்.பி.ராஜா தெரிவித்தார்.
புதன், 26 நவம்பர், 2014
திரையரங்கு கேன்டீன்களில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல்
கடலூர், நவ. 25:
கடலூர் பகுதி திரையரங்குகளில் உள்ள கேன்டீன்களில் விற்பனை செய்யப்படுகின்ற தின்பண்டங்கள் தரமானதாக இல்லை என்ற புகார்களின் பேரில் நேற்று கடலூர் தந்தை பெரியார் சிலை அருகே உள்ள பிரபல திரையரங்கத்திற்குள் உள்ள கேண்டீனில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ராஜா தலை மையில் அலுவலர்கள் நந்தகுமார், சுப்ரமணியன், மாரிமுத்து, கொளஞ்சியான் ஆகியோர் சோதனையிட்டனர்.
இதில் கடையில் விற்கப்பட்ட 100 பாக்கெட் கான்பார்ப், 100 மிராண்டா பட்டில்கள், வெங்காய வத்தல்கள் 200 கி.லோ என ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்டங்கள் மற்றும் குளிர்பதனங்கள் காலவாதியானவை என கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கேன்டீன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் மீண்டும் நடந்தால் திரையரங்கிற்கு சீல் வைக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் இதுபோல் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
ஞாயிறு, 23 நவம்பர், 2014
புதன், 19 நவம்பர், 2014
துண்டு பிரசுரம் வழங்கல்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இறைச்சிக் கடைகளை தூய்மையாக வைத்து கொள்ள வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கும்படி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லிக்குப்பத்தில் உள்ள இறைச்சிக் கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இறைச்சி கூடத்தை தீ பிடிக்காத கட்டடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். கழிவுகளை முறையாக அப்புறபடுத்த வேண்டும். தரையை தினமும் சுத்தம் செய்து துர்நாற்றம் இல்லாமல் இருக்க பினாயில் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். இறைச்சியை மூடிவைத்து விற்க வேண்டும். இந்த விதிகளைக் கடைபிடிக்கா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
திங்கள், 10 நவம்பர், 2014
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் இயங்கி வருவதாக வந்த புகார்களின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடலூர் ரவிச்சந்திரன், அண்ணாகிராமம் கந்தசாமி, குறிஞ்சிப்பாடி குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இறைச்சியின் கழிவுகளை கடை அருகிலேயே குவித்து வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, குறைகளை 15 நாளில் நிவர்த்தி செய்ய அறிவுருத்தினர். தவறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கெடு
கடலூர், நவ. 9:
கடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை டிசம்பர் 5ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு மட்டுமல்லாமல் டீக்கடைகள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரிகள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இவ்வாறு சப்ளை செய்யும் டேங்கர் லாரிகள் துருப்பிடித்து சுகாதார சீர்கேடாக காட்சி அளித்தன. உள்பகுதி துரு பிடித்திருந்ததால் குடிநீரிலும் துரு கலந்து வந்தது. குடிதண்ணீரும் கலங்கலாகவும் வாடையுடனும் விநியோகிக்கப்பட்டது. ஒரு குடம் 5 ரூபாய்க்கு வாங்கிய பொது மக்கள் இதனால் கலக்கம் அடைந்தனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை அதிரடியாக ஆய்வு செய்தார்.
ஆயிரம் லிட்டர் குடிதண்ணீரில் நான்கரை கிராம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்படவேண்டும் என்ற விதிமுறையை எந்த டேங்கர் லாரிகளும் பின்பற்றவில்லை. மேலும் பல டேங்கர் லாரிகள் கழிவுநீர் ஏற்றிச்செல்லும் வண்டிப்போல சுகாதார சீர்கேட்டுடன் காட்சி அளித்தன.
இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையால் குடிநீர் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். வட்டார பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்ரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 5ம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறமும், வெளிப்புறமும் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிதண்ணீருக்கும் நான்கரை கிராம் பிளீச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும். அனைத்து குடிநீர் லாரிகளையும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்நம்பர் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.
இவ்வாறு எல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கு அனைத்து குடிநீர் டேங்கர் லாரி களையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜா உத்தரவிட்டார்.
கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை
கடலூர்
கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை செய்ததாக 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கலப்பட உணவுப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பிரபல பாக்கு நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளைப் போன்ற நிறத்திலும், வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருந்த பாக்கு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் பண்ருட்டி வியாபாரிகள் முறையிட்டனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகத்தில் உள்ள பிரபல பாக்கு கம்பெனியின் தயாரிப்புகளை போன்ற நிறத்திலும், வடிவத்திலும் மற்றொரு பாக்கு தயாரிப்பு நிறுவனம் பாக்கு பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
உணவுப் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மற்ற நிறுவனங்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளை சோதனைக்காக சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், பாக்கு பாக்கெட்டுகளின் நிறத்தில் உரிய மாற்றங்களை செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். இது முதல் முறையாக இருப்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை நடத்திய ஆய்வுகளில் கைப்பற்றப்பட்ட 104 உணவு பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அவற்றில் 87 உணவு மாதிரிகளில் கலப்படம் இல்லையென்று தெரியவந்தது. 14 மாதிரிகளில் கலப்படம், லேபிள் குறைபாடு போன்றவை இருந்தன, அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.
இதில் 5 வழக்குகள் எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை. 2 எண்ணெய் நிறுவனங்கள், பாக்கெட்டுகளின் மீது நிலக்கடலை படத்தை பொறித்து உள்ளே பாமாயிலை வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.
குடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறை கெடு
கடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டேங்கர் லாரிகள் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்குவதில்லை என, கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை ஆய்வு செய்தார். இதில் சுகாதாரச் சீர்கேட்டுடன் டேங்கர் லாரிகள் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமை வகித்தார். வட்டார அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிநீருக்கும் நான்கரை கிராம் பிளிச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும்.
அனைத்து குடிநீர் லாரிகளையும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.
எல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ஆம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் லாரிகளை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என ராஜா உத்தரவிட்டார்.
நுகர்வோர் உரிமை தினம்: கலெக்டர் பரிசளிப்பு
கடலூர் : கடலூரில், நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமை தின விழாவில், பள்ளி, கல்லூரி அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
ஐ.நா., அறிவுறுத்தலின்படி நவம்பர் 7ம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் டவுன்ஹாலில் நடந்த விழாவிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேலு வரவேற்றார். தலைமை தாங்கிய கலெக்டர் சுரேஷ்குமார் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் பள்ளி மாணவர் நுகர்வோர் மன்றங்கள் என தலா மூன்று மன்றங்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆர்.டி.ஓ., ஷர்மிளா, துணை பதிவாளர் கமலக்கண்ணன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மணி, தொழிலாளர் ஆய்வாளர் ஜெய்சங்கர், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் எழிலன் நன்றி கூறினார்.
கடலூரில் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டு விழிப்புணர்வுக் கூட்டம்
கடலூர் : உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் கடலூர் நகரில் டேங்கர் லாரிகளில் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுப்ரமணியன், நந்தகுமார் ஆகியோர் கேப்பர் மலைப் பகுதியிலிருந்து கடலூர் நகருக்கு டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் குடிநீர் வினியோகம் செய்வதற்கான தண்ணீர் பிடிக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அடிப்படை குறைகள் கண்டறியப்பட்டது.இவற்றை சரிசெய்யும் பொருட்டு, நேற்று கடலூர் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் கடலூர் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், பத்மநாபன், குணசேகரன், நந்தகுமார், கந்தசாமி, செந்தில் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், குடிநீரை கிருமி நீக்கம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும். 1,000 லிட்டர் குடிநீரில் 4.5 கிராம் குளோரின் பவுடர் கலந்து விற்பனை செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை கண்டிப்பாக தண்ணீர் நிரப்பும் உட்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.குடிநீர் எடுத்துச் செல்லும் வண்டிகளுக்கு நீலநிற வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளுக்கு மருத்துவ தகுதிச் சான்று மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாகனத்திற்கான உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி பதிவு உரிமம் பெற வேண்டும். வாகனத்தில் ஆய்வு பதிவேடு கண்டிப்பாக இருக்க வேண்டும்.இந்த சட்ட விதிமுறைகளை செய்து குடிநீர் வினியோகம் செய்யும் வாகனங்கள் வரும் டிசம்பர் 5ம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆய்வுக்கா நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வெள்ளி, 7 நவம்பர், 2014
உணவு பாதுகாப்பு சட்டம் திரும்பப் பெறப்பட்டதா? வர்த்தக சங்கப் பொதுச் செயலாளர் விளக்கம்
By சீனிவாசன், பண்ருட்டி
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தவறான தகவல் வெளியானது.
இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் பொதுச் செயலளர் சா. ராஜேந்திரன் கூறியதாவது,
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ஐ, மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதாக சில தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில சங்கங்களும் இதேச் செய்திகளை குறுஞ்செய்தி மூலம் வணிகளுர்களுக்கு அனுப்பி வருகின்றன.
இது முற்றிலும் தவறான தகவல். மத்திய அரசு அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அதாவது, மத்திய உணவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைமையில் 22 உறுப்பினர்கள் கொண்ட குழு இருந்தது. அதில் கூடுதலாக தலைமை செயல் தலைவர் ஒருவரை நியமனம் செய்யவும், இக்குழுவின் 3ல் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களும், 10 நபர்களில் விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், நுகர்வோர், உணவு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும் என ஒரு சட்ட திருத்தத்தை அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கடந்த 19.2.2014 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒப்புதலை பெற இந்த மசோதாவை தாக்கல் செய்தார்கள்.
இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதனை தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 5.11.2014 அன்று திரும்பப் பெறுவதற்கும் புதிய சட்ட திருத்த மசோதாவை இறுதி செய்யவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மத்திய அரசால் திரும்பப் பெறப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விளக்கியுள்ளார்.
ஞாயிறு, 2 நவம்பர், 2014
குடிநீர் வினியோகிக்கும் டேங்கர்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
கடலூர்: கடலூரில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் குடிநீர் டேங்கர் டிராக்டர்களை சோதனை செய்தனர்.
கடலூர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு டயரியா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்ரமணியன், பழனிவேல் ஆகியோர் நேற்று கடலூரில் குடிநீர் விற்பனை செய்ய வந்த டேங்கர் வண்டிகளை நிறுத்தி, குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். குளோரின் கலக்காத தண்ணீரை திறந்துவிட்டு வெளியேற்றினர். மேலும் டேங்குகளை அடிக்கடி சுத்தம் செய்யவும், ஆயிரம் லிட்டர் தண்ணீரில் 4 கிராம் குளோரின் விட அறிவுறுத்தினார்.