திங்கள், 10 நவம்பர், 2014

குடிநீர் லாரிகளை பதிவுசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறை கெடு

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் குடிநீர் டேங்கர் லாரிகள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டேங்கர் லாரிகள் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்குவதில்லை என, கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ராஜா குடிநீர் டேங்கர் லாரிகளை ஆய்வு செய்தார். இதில் சுகாதாரச் சீர்கேட்டுடன் டேங்கர் லாரிகள் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமை வகித்தார். வட்டார அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், நந்தக்குமார் மற்றும் 20 டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 5ஆம் தேதிக்குள் அனைத்து குடிநீர் டேங்கர் லாரிகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் குடிநீருக்கு பாதகம் ஏற்படுத்தாத பெயின்ட் அடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆயிரம் லிட்டர் குடிநீருக்கும் நான்கரை கிராம் பிளிச்சிங் பவுடர் கலக்கப்பட வேண்டும்.

அனைத்து குடிநீர் லாரிகளையும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து அந்த பதிவு எண்ணையும் உரிமையாளர்கள் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண் ஆகியவற்றை டேங்கரின் மேல் குறிப்பிடவேண்டும்.

எல்லாப் பணிகளையும் முடித்து டிசம்பர் 5ஆம் தேதி மஞ்சக்குப்பம் மைதானத்தில் லாரிகளை கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என ராஜா உத்தரவிட்டார்.

1 கருத்து: