திங்கள், 10 நவம்பர், 2014

கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை

கடலூர்

கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் விற்பனை செய்ததாக 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கலப்பட உணவுப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பிரபல பாக்கு நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளைப் போன்ற நிறத்திலும், வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருந்த பாக்கு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜாவிடம் பண்ருட்டி வியாபாரிகள் முறையிட்டனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழகத்தில் உள்ள பிரபல பாக்கு கம்பெனியின் தயாரிப்புகளை போன்ற நிறத்திலும், வடிவத்திலும் மற்றொரு பாக்கு தயாரிப்பு நிறுவனம் பாக்கு பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.

உணவுப் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மற்ற நிறுவனங்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பாக்கு பாக்கெட்டுகளை சோதனைக்காக சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம், பாக்கு பாக்கெட்டுகளின் நிறத்தில் உரிய மாற்றங்களை செய்யும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். இது முதல் முறையாக இருப்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை நடத்திய ஆய்வுகளில் கைப்பற்றப்பட்ட 104 உணவு பொருள்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அவற்றில் 87 உணவு மாதிரிகளில் கலப்படம் இல்லையென்று தெரியவந்தது. 14 மாதிரிகளில் கலப்படம், லேபிள் குறைபாடு போன்றவை இருந்தன, அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.

இதில் 5 வழக்குகள் எண்ணெய் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை. 2 எண்ணெய் நிறுவனங்கள், பாக்கெட்டுகளின் மீது நிலக்கடலை படத்தை பொறித்து உள்ளே பாமாயிலை வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.

1 கருத்து: